சென்னை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்
|சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில குளிர்பதன மருந்து கிடங்குக்கு கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில், மாநில குளிர்பதன மருந்து கிடங்கின் கூடுதல் கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். மேலும் மருந்துகள் வினியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பையும், மின் அலுவலக சேவைகளையும் மாநில அளவில் அவர் தொடங்கிவைத்தார்
தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் நிர்வாக இயக்குனர் எம்.அரவிந்த், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகை தடுப்பூசிகள் அளிப்பதன் மூலம் 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசினால் வழங்கப்படும் தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் மாநில தடுப்பூசி மருந்து கிடங்கில் பெறப்பட்டு, 10 மண்டல தடுப்பு மருந்து கிடங்குகளுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது. மண்டல தடுப்பு மருந்து கிடங்குகளில் இருந்து 46 மாவட்ட தடுப்பு மருந்து கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதனை மேலும் மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் கூடுதலாக 2 குளிர்பதன அறைகள் மற்றும் 2 உறை நிலை வைப்பு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூடுதலாக 1 கோடி தடுப்பு மருந்துகள் சேமிக்கலாம். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், தாலுகா மற்றும் தாலுகா அல்லாத அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள குளிர்பதன கிடங்குகளுக்கு, தடுப்பு மருந்து வழங்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் இன்று (நேற்று) குளிர் பதன கிடங்கிற்கு கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மருந்து வினியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு மாநில அளவில் உருவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு அமைப்பும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் மருந்துகள் கொள்முதல் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்புகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்கு முன்பு பாம்புக்கடி மற்றும் நாய்கடிக்கான மருந்துகள் வட்டார அரசு ஆஸ்பத்திரிகளிலும், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் மட்டுமே கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் வினியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மருந்துகளின் இருப்பை மாநில அளவிலும், அனைத்து சுகாதார மாவட்ட அளவிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் வாரியாகவும் கண்காணிக்க முடியும்.
குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகளான நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள், தொற்றா நோய்களுக்கான மருந்துகள், அம்லோடிப்பின், அடினலால், மெட்பார்மின் போன்ற மாத்திரைகள் அனைத்தும் இருப்பு கண்காணிக்கப்பட்டு வழங்கப்படும்.
அதேபோல் பொது சுகாதாரத்துறையில், மின்-அலுவலக சேவைகளை மாநிலம் முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மின் அலுவலக செயலாக்கம் என்பது அலுவலக நடைமுறைகளை மின்னணு முறையில் நடத்துவதற்கான ஒரு வலை பயன்பாடு கருவியாகும். இதன் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்த திட்டதின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குனரகத்தில் செயலாக்கப்பட்ட கோப்புகளை விரைவாக முடிப்பதற்கும், அதன் மூலம் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.