< Back
மாநில செய்திகள்
பிரசவ வார்டில் கூடுதல் படுக்கை வசதி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பிரசவ வார்டில் கூடுதல் படுக்கை வசதி

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்


கள்ளக்குறிச்சி

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் அதிக அளவில் பிரசவம் நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சை பிரிவை மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பிரசவத்துக்காக கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் டாக்டர்கள் எத்தனை முறை வார்டுக்கு வந்து பரிசோதிக்கிறார்கள் என கேட்டறிந்த அவர் தொடர்ந்து பேறுகால சிகிச்சை பிரிவு, பேறுகால கவனிப்பு பிரிவு, பேறுகால அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, ஒளிக்கதிர் சிகிச்சை அறை, மகப்பேறு காத்திருப்போர் அறை ஆகிய பிரிவுகளை ஆய்வு செய்தார்.

தரமான சிகிச்சை

பின்னர் அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரித்திடவும், போதிய அளவு தண்ணீர் வசதி, அனைத்து வார்டுகளில் உள்ள ஜன்னல்களுக்கு கொசு வலைகள் அமைத்திடவும், மின்விசிறி மற்றும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும் பொதுப்பணி மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்ட அவர் மருத்துவமனையில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுவதால் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கூடுதலான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமித்து தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரியின் உதவி நிலைய மருத்துவ அலுவலர் பொற்செல்வி, மகப்பேறு மருத்துவர்கள் அனிதா, ஜெயபாரதி, குழந்தைகள் நலமருத்துவர் செந்தில்ராஜா மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்