< Back
மாநில செய்திகள்
இனிப்பு பலகாரங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
மாநில செய்திகள்

இனிப்பு பலகாரங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
5 Nov 2023 5:52 AM IST

இனிப்புகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகளும், இனிப்புகளும் தான் குபீரென கண்முன்னே தோன்றும் இரட்டை விஷயங்களாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைகளில் இனிப்பு-கார வகைகள் தயார் செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இனிப்புகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய குழுவினர் பங்கேற்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

அந்த அறிவுரைகள் வருமாறு:-

செயற்கை நிறமூட்டிகள் கூடாது

* உணவு வணிகர்கள் தங்களது உணவு பாதுகாப்பு உரிமத்தை காட்சிக்கு வைத்திருக்க வேண்டும்.

* உணவு தயாரிக்கும் இடத்தில் போதிய வெளிச்சம் இருக்கவேண்டும். சுவர்களில் கரி படிந்திருக்கக்கூடாது.

* பூச்சிகள், எலிகளின் நடமாட்டம் இருக்கக்கூடாது.

* பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே அந்த எண்ணெயை பயன்படுத்தவேண்டும்.

* இனிப்பு, கார வகைகளில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் 100 பி.பி.எம். அளவில் சேர்க்கலாம்.

* செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க கூடாது.

* பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தர நிர்ணய அளவு நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பைகள் கூடாது

* பணியாளர்கள் கைகளில் நகங்களுடன், முழு சீருடையற்ற வகையில் இருக்க கூடாது. கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

* நோயால் பாதிக்கப்பட்டவர்களை பணியாற்ற அனுமதிக்க கூடாது.

* பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் மீது உணவு பொருளின் விவரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிப்பு, காலாவதி விவரங்கள் இருக்க வேண்டும்.

* பால் பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுடன், பால் அல்லாத பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்களை சேர்த்து பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது.

* உணவு பொருட்கள், எண்ணெய் பலகாரங்கள் பரிமாறும்போது இலை அல்லது தட்டுகள் பயன்படுத்த வேண்டும். தாள்கள், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "உணவு பாதுகாப்பு துறையிடம் உரிய அனுமதி பெற்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் இனிப்புகள் தயாரிக்கலாம். ஆனால் சிலர் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து சீசனுக்காக ஆர்டர் எடுத்து இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அறிகிறோம். அவர்கள் தங்கள் விவரங்களை கொடுத்து தற்காலிக உரிமம் பெறலாம். அதை விடுத்து பாதுகாப்பின்றி, சுகாதாரமின்றி இனிப்பு-கார வகைகள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். மேற்கண்ட அறிவுரைகளை மீறும் கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபொதுமக்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளோம். பொதுமக்களும் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்", என்றனர்.

மேலும் செய்திகள்