சென்னை
அதானி குழும விவகாரத்தை கண்டித்து போரூர் எஸ்.பி.ஐ. வங்கி முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
|அதானி குழும விவகாரத்தை கண்டித்து போரூர் உள்ளிட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் எல்.ஐ.சி. முன்பு காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. நிறுவனங்களின் மக்கள் பணத்தை மோசடி செய்துள்ள அதானிக்கு மத்திய அரசு உதவுவதாக கூறி தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர் தலைமையில் சென்னை போரூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தளபதி பாஸ்கர் கூறும்போது, 'எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை அதானி கொள்ளை அடிப்பதற்கு துணை போகும் மக்கள் விரோத பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்கும் வரை ஓய மாட்டோம்' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் மற்றும் நிர்வாகிகள் எம்.பிரபாகரன், ஆர்.பூங்கொடி, கமலிகா காமராஜ், சாய்ராம், சுரேஷ், ரோமியோ, முரளி, மோகன், பீர்முகமது, நாஞ்சில் ரமேஷ், ராமாபுரம் அப்பு, கண்ணன் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'மோடி அரசே! பா.ஜ.க. அரசே! வளர்க்காதே, வளர்க்காதே! கார்ப்பரேட் முதலாளிகளை ஊழல் செய்து வளர்க்காதே! மக்கள் வரிப்பணத்தில் வளர்க்காதே! என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார், எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தை, அதானி குழுமத்தில் முதலீடு செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தும், இது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார் தீர்த்தி, கே.பி.துரை, சுகுமார், அரவிந்த் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டில்லி பாபு தலைமையில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, இமையாகக்கண். மாநில செயலாளர் அகரம் கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.