விருதுநகர்
கி.பி. 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
|அருப்புக்கோட்டை அருகே கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கி.பி.7-ம் நூற்றாண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கள ஆய்வு
அருப்புக்கோட்டை அருகே உள்ள மூளிப்பட்டி என்னும் கிராமத்தின் விவசாய நிலத்தில் உள்ள ஒரு பாறையில் சற்று மாறுபட்ட வடிவமுடைய எழுத்துக்கள் காணப்படுவதாக நிலத்தின் உரிமையாளர் கனிராஜ், என்ஜினீயர் கணேஷ்பாண்டி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன், வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் கள ஆய்வு மேற்ெகாண்டனர்.
இதில் 76 செ.மீ. வெளிவிட்டமும், 48 செ.மீ. உள்விட்டமும் 13 செ.மீ. துளையுடன் கூடிய ஓர் செக்கின் மேற்புறத்தில் ஒரு வரியுடன் கூடிய கி.பி. 7-ம் நூற்றாண்டினை சார்ந்த வட்டெழுத்துக்கள் காணப்படுவதனை உறுதி செய்துள்ளனர்.
செக்கு கல்வெட்டு
இந்த எழுத்துக்கள் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கம் அவர்களின் உதவியோடு படிக்க பெற்றது. ஒரு வரியுடன் கூடிய இக்கல்வெட்டில் ஸ்ரீகோவஞ்சேந்தன் என்னும் ஒரு பெயர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ஸ்ரீகோவஞ்சேந்தன் என்பவர் இந்த செக்கினை ஊர் மக்களின் நலனுக்காக ஏற்படுத்தி இருக்காலம். முற்காலத்தில் ஊருக்கு பொதுவாக இது போன்ற செக்கு ஏற்படுத்துவது வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த செக்குகளில் மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டி பெறப்படும் எண்ணெய்யை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.