நடிகை விஜயலட்சுமி புகார்: 'உண்மையென்றால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' - சீமான் பேட்டி
|‘என் மீது எழுந்த புகாரில் நான் உண்மையான குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருப்பூரில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த 2 நாட்களாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
என் மீது குற்றச்சாட்டு என்று இருந்தால் இத்தனை கூட்டம் இங்கு கூடியிருக்காது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதுபோன்று பேசப்படுகிறது. 11 வருடமாகவே ஒரே குற்றச்சாட்டு வருகிறது.
ஒரு பெண் என்னை ஏமாற்றி விட்டு தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். நான் சென்று என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என்று பேசிக்கொண்டு இருந்தால் என்னை காரி துப்புவார்கள். எனக்கு குடும்பம் உள்ளது. குழந்தைகள் உள்ளனர். அவசியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள். என்னை திசை திருப்பி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதனால் இன்னைக்கு ஒரு புகார் வரும். நாளைக்கும் ஒரு புகார் வரும்.
யார் புகார் மனு கொடுத்தாலும் போலீசார் விசாரிப்பார்கள். உண்மையாக நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள். பயப்படுகிற ஆள் நானில்லை. நான் எங்காவது ஓடி விட்டேனா, வேறு மாநிலத்துக்கு சென்று விட்டேனா, இங்கு தான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் குறித்து அ.தி.மு.க. ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர், தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று விஜயலட்சுமி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு தி.மு.க. ஆட்சியில் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். என்னதான் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.
மேலும் சீமான் கூறியதாவது:-
ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரு மாநிலத்தில் ஆட்சி கலைந்துவிட்டால், அந்த மாநிலத்துக்கு மட்டும் தேர்தலா இல்லை ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தலா என்பதை பார்க்க வேண்டும்.
தி.மு.க.வில் ஊழல் என்றார்கள். வரவேற்கிறோம். ஆனால் அ.தி.மு.க.வில் இருக்கிறதா, இல்லையா, தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிடும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினரின் சொத்துபட்டியலையும் வெளியிட வேண்டும். கூட்டணி வைத்தால் மறைத்துவிடுவீர்கள் என்றால் உங்களிடம் என்ன நேர்மை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.