நடிகை விஜயலட்சுமி வழக்கு: வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்?
|நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை,
நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் விஜயலட்சுமி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், , நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்த செப்டம்பர் 9-ந் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்டம்பர் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.