நடிகை ரேகா நாயரின் கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - ஓட்டுநர் கைது
|சென்னையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை,
ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). இவர் மது போதையில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், மஞ்சன் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார், எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார் ஓட்டுநர் பாண்டி (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பாண்டி நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.