நடிகை கவுதமி புகார்: அழகப்பனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
|அழகப்பன் மற்றும் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காரைக்குடி,
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கவுதமி. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், 'எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன்.
இந்த நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மேலும் பாஜக கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நடிகை கவுதமி பாஜக கட்சியில் இருந்து வெளியேறினார். நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கவுதமி அளித்த நில மோசடி புகாரில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.