நடிகை சித்ரா மரண வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
|நடிகை சித்ரா மரண வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரிய கணவர் ஹேம்நாத் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
சென்னை,
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார், அவரது கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
திடீர் திருப்பமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நகர்வுகள் சித்ராவின் மரண வழக்கை புரட்டிப்போட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என குற்றப்பத்திரிக்கையை ரத்த செய்யக்கோரிய ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.