நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு - திருமாவளவன்
|சினிமா மூலம் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர் என திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா?என்று தெரியவில்லை. அவர் அம்பேத்கர், காமராஜர் பற்றி படிக்க சொன்னது வரவேற்கத்தக்கது.
கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் வரவேற்கிறோம்.
மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கேரளாவில் நடிகர் மம்முட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சான் என பலர் சினிமா புகழை பயன்படுத்தவில்லை.
தமிழகத்தில் மட்டும் தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றவர்களை ஓரம் கட்டி விட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். சினிமா மூலம் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர் என்றார்.