தேனி
நடிகர் விஜய்யின் 'லியோ' படம் திரையிடும்தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம்:கலெக்டர் தகவல்
|நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் திரையிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையிட கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் இப்படத்தினை திரையிடலாம். வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி (அதிகபட்சமாக 5 காட்சிகள் மட்டுமே) குறித்த நேரத்திற்குள் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் தியேட்டர்களில் இப்படம் திரையிடக்கூடாது. தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்போது தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) விதிகள் -1957 மற்றும் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டம் 1939-ல் உள்ள விதிகளை விட கூடுதலாக வசூல் செய்தால் புகார் செய்யலாம்.
இதுதொடர்பாக சிறப்பு கண்காணிப்பு குழு தலைவர்களை (பெரியகுளம் கோட்டம்) -9445000451, (உத்தமபாளையம் கோட்டம்) 9445000452 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், 04546-261093 என்ற தொலைபேசி எண், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கான தாசில்தார்களை தொடர்பு கொண்டும் புகார் செய்யலாம். சுகாதாரக்குறைபாடு அல்லது கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகள்- 1957-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.