< Back
மாநில செய்திகள்
நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்: சீமான்
மாநில செய்திகள்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்: சீமான்

தினத்தந்தி
|
28 Jan 2024 6:22 AM IST

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார்.

நெல்லை,

நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 20 ஆண், பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கன்னியாகுமரி தொகுதிக்கு மரிய ஜெனிபர், நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு சத்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும், கூட்டணி கிடையாது. மக்களை நம்பித்தான் போட்டியிடுகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலில் மட்டும்தான் போட்டியிடுவேன்.

காங்கிரசையும், பா.ஜனதாவையும் சம எதிரியாகத்தான் பார்க்கிறோம். அந்த இரு கட்சிகளிடமும் சண்டையிடுவேன். தேசியமே இல்லை என்பது எனது கோட்பாடு. தேசிய கட்சிகளை கண்டிப்பாக எதிர்ப்பேன். பா.ஜனதாவையும், காங்கிரசையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதனை திராவிடம் தடுக்காமல் இருக்கிறது.

மோடி மீண்டும் பாரத பிரதமராக வந்து விடுவார் என்று தி.மு.க. பூச்சாண்டி காட்டி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 'இந்தி தெரியாது போடா' என்றும், ஆளுங்கட்சியானவுடன் 'இந்தி தெரியும் வாடா' என்பதும்தான் தி.மு.க.வின் கொள்கை. கேலோ விளையாட்டு போட்டிக்கு கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் தி.மு.க. உள்ளது. பிரதமர் மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார்?. ஆனால் அவர் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இதன் மூலம் பா.ஜனதா-தி.மு.க. இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதை காட்டுகிறது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். சீமான் மட்டும்தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைப்பார். நல்ல ஆட்சி, நல்ல அரசை உருவாக்க வேண்டும்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் பேரிடம் பெற்ற கையெழுத்து படிவங்களை தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கண்காட்சியாக வைத்தனர். அவற்றை ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ கொடுத்திருக்கலாம். விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க வந்த பிரதமரிடமும் வழங்கி இருக்கலாம். நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏன் கேட்கவில்லை?.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்