விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நடிகர் விஜய் - நேரில் அஞ்சலி
|தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது
சென்னை,
தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.