< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நிறைவு செய்த நடிகர் விஜய்..!!

தினத்தந்தி
|
17 Jun 2023 11:05 PM IST

12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது.

சென்னை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த சூழலில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.



முன்னதாக காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரவு 10 மணியைத் தாண்டி 11 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யும் களைப்பின்றி தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்கி வருகிறார். தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண, மாணவிகளுக்கு அவர் சான்றிதழ் வழங்கியுள்ளார். மொத்தம் 1400 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் வசனம் தான். 'காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது'. அதுதான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம்.



அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்குப் போவது, கல்லூரி போவது, பட்டம் பெறுவது மட்டும் முழுமையான கல்வி அல்ல என விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியுள்ளார்.

அதைக் கற்று, அதையெல்லம் மறந்து பிறகு எது எஞ்சியுள்ளதோ அது தான் கல்வி என அவர் சொல்லியுள்ளார். முதலில் அது புரியவில்லை. அப்புறம் போகப் போக புரிந்தது. நாம் கற்கும் கல்வியை கடந்து நம்மிடம் எஞ்சி இருப்பது நமதும் குணமும், சிந்திக்கும் திறனும் தான். இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் முழுமையான கல்வி அறிவை பெற முடியும்.

பணத்தை இழந்தால் அதில் இழப்பு ஏதும் இல்லை. ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழக்கிறோம். ஆனால், குணத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கிறோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரை பெற்றோர் உடன் இருந்து வந்த நீங்கள், படிப்புக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அந்த சுதந்திரத்தை கவனத்துடன் கையாள வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது.



இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்.

நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான். நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள்.


இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.



இந்நிலையில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது. ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.




மேலும் செய்திகள்