< Back
மாநில செய்திகள்
நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் அடுத்தடுத்த வீடுகளை பூட்டி விட்டு ஆடுகள் திருட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் அடுத்தடுத்த வீடுகளை பூட்டி விட்டு ஆடுகள் திருட்டு

தினத்தந்தி
|
19 March 2023 1:05 AM IST

நடிகர் வடிவேலு சினிமா பட பாணியில் அடுத்தடுத்த வீடுகளை பூட்டி விட்டு ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆடுகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியை சேர்ந்தவர் மாணிக்கம், விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாணிக்கம் தனது வீட்டின் முன் பகுதியில் ஆடுகளை கட்டிவிட்டு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே மாணிக்கம் வெளியே வந்தார். அப்போது 2 மர்ம ஆசாமிகள் ஒரு சரக்கு வேனில் ஆடுகளை திருடி ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டார்.

இதையடுத்து மர்ம ஆசாமிகள் 3 ஆடுகளை மட்டும் சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மாணிக்கத்தின் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் கதவை திறந்து வெளியே வர முற்பட்டனர். ஆனால் கதவை திறக்க முடியாமல் வெளிப்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் வெளியே நின்றவர்கள் தாழ்ப்பாளை எடுத்துவிட்டனர்.

சினிமா பட பாணியில்...

இதேபோல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் பிளக்குகளையும் திருடர்கள் கழட்டி சென்றிருந்தனர். திருடும் போது அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வராத வகையிலும், மோட்டார் சைக்கிளில் பின் தொடராமலும் இருக்க திருடர்கள் முன் ஏற்பாடாக இச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

நடிகர் வடிவேலு நடித்த ஒரு படத்தில் இதேபோல் பக்கத்து வீடுகளை பூட்டிவிட்டு திருட்டு செயலில் ஈடுபடுவது போல் காட்சி வரும். இதே பாணியில் கறம்பக்குடி பகுதியில் ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்