< Back
மாநில செய்திகள்
நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட  தண்டனை நிறுத்திவைப்பு
மாநில செய்திகள்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

தினத்தந்தி
|
15 March 2024 5:17 PM IST

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை சிறப்பு கோர்ட்டு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட்டு, நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது. அப்போது எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்