< Back
மாநில செய்திகள்
தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மாநில செய்திகள்

தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினத்தந்தி
|
22 May 2023 6:46 PM IST

நடிகர் சரத்பாபு மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சரத்பாபு மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நிழல் நிஜமாகிறது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் இரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்