< Back
மாநில செய்திகள்
படப்பிடிப்புக்காக பணகுடி வந்த நடிகர் ரஜினிகாந்த்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

படப்பிடிப்புக்காக பணகுடி வந்த நடிகர் ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
11 Oct 2023 2:23 AM IST

படப்பிடிப்புக்காக பணகுடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்தை காண ரசிகர்கள் குவிந்தனர். காரை நிறுத்தி ரசிகர்களுக்கு கை கொடுத்தார்.

பணகுடி:

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தின் மூலம் பிரபலமான ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சுவாரியார் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

தற்காலிகமாக 'தலைவர் 170' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

2-வது கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் பணகுடி பகுதிக்கு வந்தனர். இங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் நேற்று காலையில் பணகுடிக்கு வந்தார்.

இதை அறிந்த ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் பணகுடி பகுதியில் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்ததும் ரஜினிகாந்த் காரை நிறுத்த சொன்னார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ரசிகர்கள், பொதுமக்களுக்கு கை கொடுத்தார். பின்னர் ரஜினிகாந்த் அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். படப்பிடிப்பு தளத்திற்குள் பொதுமக்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரஜினிகாந்த் வருகையையொட்டி பணகுடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்