நடிகர் ரஜினிகாந்த் உ.பி. முதல்-மந்திரி காலில் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
|நடிகர் ரஜினிகாந்த் உ.பி. முதல்-மந்திரி காலில் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் ஆ.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு தேவையில்லாத இடையூறுகள் செய்து வருகிறார். கவர்னரை மக்கள் விரைவில் ஊரை விட்டு அனுப்பும் சூழல் வரும். சட்டசபையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ அதில் கையெழுத்து மட்டும் போட வேண்டியது தான் கவர்னரின் வேலை. டிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக சைலேந்திர பாபு நியமனத்திற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். கவர்னர் ரவி மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது.
உத்திரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி நதிநீர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.