திருநெல்வேலி
ரசிகர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த நடிகர் ரஜினிகாந்த்
|பணகுடியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் வரவேற்பில் நெகிழ்ந்து போனார்.
பணகுடி:
'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள தனியார் தள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4 நாட்களாக நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதற்காக கன்னியாகுமரியில் ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ரஜினிகாந்த் தினமும் காரில் வந்து படப்படிப்பில் பங்கேற்றார். அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வரும்போதும், படப்பிடிப்பு முடிந்து திரும்பி செல்லும்போதும் ஏராளமான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் திறந்த காரில் சென்று கையசைத்து கும்பிட்டவாறு ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் கூறுகையில், ''கடந்த 1977-ம் ஆண்டு 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வந்தேன். தற்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்பகுதிகளுக்கு வந்துள்ளேன்'' என்று கூறி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நேற்று காலை 7 மணியளவில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் சண்டைக்காட்சியில் நடித்தார். பின்னர் காலை 10.30 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் காரில் திரும்பி சென்றார். பணகுடியில் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாகவும், அடுத்தகட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.