திண்டுக்கல்
நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்
|பழனி முருகன் கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார்.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வருகை தருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி சன்னதிக்கு சென்று முருகப்பெருமானை மனமுருக வேண்டினார்.
இதைத்தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் உள்ள போகர் சித்தர் சன்னதிக்கு சென்று, சுமார் 10 நிமிடம் தியானம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மின்இழுவை ரெயில் வழியாக அடிவாரம் வந்து, கிரிவீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று வழிபட்டார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, நடிகை கங்கனா ரணாவத் ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ராகவா லாரன்சுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தனர்.