< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் பவன் கல்யாண் இரங்கல்
சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் பவன் கல்யாண் இரங்கல்

தினத்தந்தி
|
28 Dec 2023 2:25 PM IST

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

குடும்பக் கதைகளுடன், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.

திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலரால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன், என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்