< Back
மாநில செய்திகள்
நடிகர் மாரிமுத்து மறைவு: டிடிவி தினகரன், விஜயகாந்த் இரங்கல்
மாநில செய்திகள்

நடிகர் மாரிமுத்து மறைவு: டிடிவி தினகரன், விஜயகாந்த் இரங்கல்

தினத்தந்தி
|
8 Sept 2023 3:19 PM IST

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மறைவுக்கு டிடிவி தினகரன், விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து வீட்டிற்கு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மாரிமுத்து பிரபலமானார். அதுமட்டுமின்றி தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.

அவரது திடீர் மரணம் திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

மாரிமுத்துவை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்