நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
|நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை டைரக்டு செய்துள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த மனோபாலாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோபாலா நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள மரும்பூர். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் இறந்த தகவல் அறிந்ததும் திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. அவரது உடல் வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்துள்ளனர். அங்கு மின்சார மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.