பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
|'மெய்யழகன்' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
சென்னை,
96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியின் 27-வது படமாக 'மெய்யழகன்' உருவாகியுள்ளது. வரும் 27-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தொகுப்பாளர் ஒருவர் லட்டு வேண்டுமா? என கார்த்தியிடம் கேட்டார் அதற்கு கார்த்தி 'அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்' என கூறினார்.
அதனைத்தொடர்ந்து, மோத்தி லட்டாவது வேண்டுமா? என மீண்டும் கேட்ட தொகுப்பாளரிடம், லட்டே வேண்டாம் என கார்த்தி பதில் சொன்னார்.
கார்த்தியின் இந்த பேச்சு வைரலானதையடுத்து, "லட்டை கேலிக்குரிய பொருளாக்குவதா?" என ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக, உங்கள் மீது வைத்துள்ள மதிப்பால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தனாக நம் கலாசாரத்தை எப்போதும் மதிப்பவன் நான்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.