< Back
மாநில செய்திகள்
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்: விழுப்புரம் கூடுதல் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்: விழுப்புரம் கூடுதல் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றார். மேலும் அவர் ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக முழுமையாக உழைப்பேன் என பேட்டி அளித்துள்ளார்.

கூடுதல் கலெக்டர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பணியாற்றி வந்த சித்ரா விஜயன், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்க திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூரில் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக உழைப்பேன்

அதன் பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நான், வரலாற்று சிறப்புமிக்க விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பொறுப்பேற்றுள்ளேன். மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படியும், அரசின் அனைத்துத்துறை அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடனும் கிராமப்புற மக்களுக்கான அடிப்படை வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட மக்களின் நலனுக்காகவும், அனைத்து ஊராட்சி பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் என்னுடைய முழு உழைப்பும் இருக்கும் என்றார். புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு அரசுத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்

தொடர்ந்து, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட கலெக்டர் பழனியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்