அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு உறுதி
|அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரிய புள்ளான், வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற இந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 394 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 114 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை இந்து நிலைய அறநிலையத்துறை செய்து வருகிறது. திருக்கோவிலுக்கு வரவேண்டிருந்த வாடகை பாக்கி நிலுவையில் இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.260 கோடியை வசூலித்து திருக்கோவிலுக்கு கொண்டு சேர்த்துள்ளோம்.
அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போலிச் சான்றிதழ் வழங்கி திருக்கோவில்களில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் திருடு போன 10-க்கும் மேற்பட்ட சிலைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் முயற்சியால் தமிழகத்தில் சிலை கடத்தல் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.