மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் - மின்வாரியம் எச்சரிக்கை
|மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மின் இணைப்புடன் ஆதரை இணைக்கும் பணிகளில் பொதுமக்கள் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கபடும் எனவும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்களை பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் தெரிவித்துள்ளது.