பழனி கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
|தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்
சென்னை,
பழனி கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
கோவில்களுக்கு தேவையான நெய், ஆவின் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்படவேண்டுமென அனைத்து கோவில்களுக்கும் ஆணையரால் 2021-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. பழனி கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த வினோஜ் செல்வம், செல்வக்குமார் ஆகியோர் சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் செய்துள்ளது குறித்து கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பிரிவு கண்காணிப்பாளரால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனியில் முழுமையாக ஆவின் நெய் தான் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு அதிகமாக தேவைப்படும் நிகழ்வில் தனியார் நிறுவனத்திடம் வாங்கப்படுகிறது. அந்நிறுவனம் இதுவரை எவ்வித புகாருக்கும் உள்ளாகாத நிறுவனமாகும். பழனி கோவிலில் வழங்கப்படும் இலவச பஞ்சாமிர்தம் மற்றும் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தங்கள் அனைத்தும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமாகவே வழங்கப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்