திருவள்ளூர்
திருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை
|திருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலை 26 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இந்த சாலை திருவொற்றியூர் மீஞ்சூர் வரை ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சர்வீஸ் சாலை அமைத்து அந்த சாலை பஸ் போக்குவரத்துக்கு மூன்று சக்கர வாகனங்கள் பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சர்வீஸ் சாலையில் பொதுமக்கள் செல்வது கடினமாக உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக செங்குன்றம் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மலைச்சாமி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோபிராஜ் ஆகியோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது கொண்டகரை, நாப்பாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார்குப்பம், வெள்ளிவாயல்சாவடி போன்ற இடங்களில் நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களை அகற்றிவிட்டு கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பொக்லைன் எந்திர உதவியுடன் சாலையின் தடுப்பு சுவர் கற்கள் அகற்றப்பட்டு இருந்த இடத்தில் மீண்டும் தடுப்பு சுவர் அமைத்தனர். தடுப்புச் சுவர்களை அகற்றி சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.