< Back
மாநில செய்திகள்
குமரியில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

குமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது.

கருத்தரங்கிற்கு வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காலநிலை மாற்றம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இது இயற்கை சூழல், மனித உயிர், பொருளாதார சொத்துகள் மற்றும் செயல்பாடுகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே தேவையான நடவடிக்கைகளுக்கு வசதியாக தமிழக அரசு, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் உள்ளது. இந்த இயக்கத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த முன்முயற்சியின் கீழ், தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் பல்வேறு கூறுகளை முன்மொழிந்துள்ளது. அவற்றில் ஒன்று, மாவட்ட அளவிலான பங்குதாரர் பட்டறைகள் அமைத்து காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் வளர்ச்சித் திட்டத்துடன் தழுவல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. மாவட்ட அளவிலான காலநிலை நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான வரைவு மாவட்ட காலநிலை பணி ஆவணங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளை இணைத்துக் கொள்வதையும், பட்டறைகளின் போது அறிவு பரிமாற்றம் மூலம் மாவட்ட அளவில் காலநிலை மீள்தன்மையை உருவாக்குவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை ஆராய்ந்து அவற்றை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற உதவி இயக்குனர் மனிஷ் மீனா, உதவி வன அலுவலர் (பயிற்சி) வித்யாதர், அண்ணா பல்கலைக்கழக காலநிலை ஆய்வக திட்ட உறுப்பினர் மலர் விழி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்