தூத்துக்குடி
பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
|புதுக்கோட்டை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் பஞ்சாயத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் லில்லிமலர் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ஆண்டுக்கு 4 முறை நடந்து வந்த கிராம சபை கூட்டங்கள் தற்போது 2 தினங்கள் கூடுதலாக சேர்த்து ஆண்டுக்கு 6 முறை நடத்தப்பட்டு வருகிறது. கிராம சபை கூட்டத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து உள்ளனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும். அந்தோணியார்புரத்தில் குடிநீர், தெருவிளக்கு, நாச்சியார்புரத்தில் அங்கன்வாடி, அதே போன்று இலவச வீடு, மயான பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி உதவி இயக்குநர் உலகநாதன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சரசுவதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) சுந்தரலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசீம், தாசில்தார் பிரபாகர், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், இளைஞரணி செயலாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.