< Back
மாநில செய்திகள்
விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
திருச்சி
மாநில செய்திகள்

விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

தினத்தந்தி
|
1 Oct 2023 2:43 AM IST

விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

அமைப்பு சாரா ஓட்டுனர் அணி

தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் புதிய மாவட்ட, மாநகர நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாநில செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் முத்துராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

உரிமம் ரத்து

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தொழிலாளர்களின் நலனை காப்பதில் அக்கறை கொண்டிருந்தார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நலவாரியத்தை உருவாக்கினார். அவரது கொள்கை வாரிசாக நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு அங்கீகாரம் அளிக்க தனி அணியை உருவாக்கியுள்ளார்.

விபத்து நேரும் நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற, சென்னையில் அடுத்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசித்து, கோர்ட்டு தடை வந்துவிடாமல் பாதுகாக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ, டாக்சி ஸ்டாண்டுகளில் கருணாநிதி நூற்றாண்டு பலகையை நிறுவி, அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

கூட்டத்தில், 2013-ம் ஆண்டுக்கு பின் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தவில்லை. எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எனவே ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க வேண்டும். அமைப்புசாரா டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அமைப்புசாரா டிரைவர்கள் காப்பீடு பிரீமியம் தொகையை அரசே செலுத்த வேண்டும். விபத்து காலங்களில் டிரைவிங் லைசென்சை ரத்து செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., திருச்சி மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன் (மேற்கு), மதிவாணன் (கிழக்கு), அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட டிரைவர்கள் காக்கி நிற பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்து வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்