கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்க நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
|கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் அதிகமாக வசிக்கும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 213 தொடக்கப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உண்டு உறைவிடப் பள்ளிகள் என 298 பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் பல்லாண்டு காலமாக இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களுடைய நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுடனான விடுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றி தி.மு.க. அரசு 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தபோது, அதற்கு எதிர்ப்பு குரல் எழுந்தது. நானும் அறிக்கை விடுத்திருந்தேன். இருப்பினும், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போதே இதற்கு கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையோடு சேர்க்கப்படாது என்று தொடர்புடைய துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த உறுதிமொழியை மீறி, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அரசு கூட்டியதாக தகவல்கள் வருகின்றன.
பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெற்று உயர் நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்ற நிலையில், இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையினை எதிர்த்து மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் சீர் மரபினர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தி.மு.க. அரசின் இந்தச் செயல் கலாசார சிறுபான்மை சமூகமாக விளங்கும் பூர்வ பழங்குடி மக்களான பிரமலைக் கள்ளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், அரசின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும் தெரிவித்து, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்-அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.