கிருஷ்ணகிரி
ஓசூரில் அரசு பள்ளிகளை முன்மாதிரியாக மாற்ற நடவடிக்கை
|ஓசூரில் அரசு பள்ளிகளை முன்மாதிரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கல்வி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓசூர்:-
ஓசூர் மாநகராட்சியில் கல்வி குழு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கல்விக்குழு தலைவர் எச்.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது., பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் பேசுகையில், ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் 44 அரசு பள்ளிகளையும் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்மாதிரியான பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 34 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.5.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் சிவராமன், யசஷ்வினி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.