< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை
மதுரை
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
7 Jan 2023 12:18 AM IST

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

வாடிப்பட்டி,

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களின் தரம், அளவு, இருப்பு விவரம், தேவை பற்றாக்குறை ஆகிய பட்டியல்களை நேரில் பார்வையிட்டு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன் வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும்.

அரசியல் தலையீடு இருக்காது

தரமான ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு அதிகமாகவே பொருட்கள் ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன. நெல் மூடைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 சதவீதம் கூடுதல்

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கரும்புக்கு ரூ.30 கொடுக்கப்பட்டது ஆனால் தற்போது ரூ.33 என உயர்த்தி 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மட்டும் தான் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூரில் கரும்பு அதிகம் விளைகிறது. இதில் வெட்டுக்கூலி, கட்டுக்கூலி, லாரி வாடகை ஏற்றுதல், இறக்குதல் உள்ளிட்ட செலவினங்கள் உள்ளன. இவையெல்லாம் கழித்த பின்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையினை கொடுப்பதற்கு கலெக்டர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தான் கரும்பு விலையை நிர்ணயம் செய்வார். பா.ஜனதா கட்சி அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர் அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மதுரை மண்டல மேலாளர் அருண்பிரசாத், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன், தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்