பெரம்பலூர்
காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை
|தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புவியியல் ரீதியாக ஆய்வு செய்யும் வகையில் காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.13 கோடியே 40 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
காரை அருகே அயனாவரம் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லுயிர் புதைபடிமங்களை பாதுகாக்கும் வகையில், தொல்லுயிர் புதை படிமங்கள் பூங்காவை சுற்றி ரூ.7 கோடியே 89 லட்சம் செலவில் முள்வேலி அமைத்தல், அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அருங்காட்சியகம்
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம், நாரணமங்கலம் முதல் சிறுகன்பூர் வரை ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியையும், மருதையான் கோவில் முதல் கீழமாத்தூர் வரை ரூ.76 லட்சத்து 15 ஆயிரம் செலவிலும், கொளத்தூர் முதல் அருணகிரிமங்கலம் வரை ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிலும், மேலமாத்தூர் முதல் இலந்தங்குழி வரை ரூ.1 கோடி 62 லட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.5½ கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:-
காரை தொல்லுயிர் புதை படிமங்கள் அருங்காட்சியகம் 436 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாவலர் அறை மற்றும் கண்காணிப்பு கோபுரம் 269 சதுர மீட்டர் பரப்பளவிலும், பாதுகாப்பு முள் வேலி 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக கடல் கொண்ட பூமியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் தற்போது தொல்லுயிர் எச்சங்களின் பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது.
கல்மரப்பூங்கா
தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் புவியியல் ரீதியாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த பணி பெரிய முன்னெடுப்பாக அமையும். அருகிலுள்ள சாத்தனூர் கல்மரப்பூங்கா தற்போது சுற்றுலா தலமாக மாறி வருவதை போல் எதிர்காலத்தில் இந்த காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவும், சுற்றுலா தலமாக அமையும். எதிர்காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது உலகளவிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு ஆய்வு செய்யும் வகையில் பயன்படுவதோடு சுற்றுலா தலமாகவும் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.