ராணிப்பேட்டை
அனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாக மாற்ற நடவடிக்கை
|மாங்காட்டுச்சேரி ஊராட்சியில் அனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் தெரிவித்தார்.
மாங்காட்டுச்சேரி ஊராட்சி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாங்காட்டுச்சேரி ஊராட்சியில் மாங்காட்டுச்சேரி, கடம்பநல்லூர், எடக்கண்டிகை, அருந்ததி பாளையம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக கடம்பநல்லூர் பகுதியை சேர்ந்த பா.ரேகா பார்த்திபன் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
அடிப்படை வசதிகள்
கடம்பநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், பைப் லைன், நிலா குட்டை தெருவில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்திலும், கடம்பநல்லூர் காலனி, மெயின் ரோட்டில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்திலும், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்திலும் சிமெண்டு சாலைகள், கடம்பநல்லூரில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், அதே பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளியில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தில் கழிப்பிடம் சீரமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல், மாங்காட்டு சேரியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் புதிய மின் மோட்டார், பைப்லைன் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
மாங்காட்டுச்சேரியில் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எடக்கண்டிகையில் ரூ.4 லட்சத்தில் புதிய பைப் லைன், அதே பகுதியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, அருந்ததி பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.19 லட்சத்து 85 ஆயிரத்தில் புதிய கட்டிடம், ரூ.7 லட்சத்தில் சமையல் கூடம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இலவச வீடுகள்
மாங்காட்டுச்சேரியில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி, கடம்பநல்லூரில் ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம், மாங்காட்டு சேரியிலிருந்து எடக்கண்டிகைக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தில் பைப் லைன், எடக்கண்டிகையில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, அருந்ததி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சியை பசுமையாக மாற்ற மரக்கன்றுகளும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பனை விதைகள் நடப்பட்டு உள்ளது. ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
சிமெண்டு சாலைகளாக
மாங்காட்டுச்சேரி ஊராட்சியில் பூங்கா, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், நிழற்குடை, உயர் மின் கோபுர விளக்கு அமைக்கவும், மண் சாலைகளாக உள்ள அனைத்து தெருக்களையும் சிமெண்டு சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நான் தினமும் காலையில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் சரி செய்து கொடுத்து வருகிறேன்.
மேலும் அலுவலகத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தி கொடுத்து வருகிறேன். ஊராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறைகளை நான் நேரடியாக அறிந்து அந்த இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து சரி செய்து வருகிறேன். வார்டு பகுதிகளில் தங்கு, தடை இல்லாமல் குடிநீர் கிடைக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன். மின் விளக்குகள் எரியாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடத்தில் புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாங்காட்டுச்சேரி ஊராட்சியை அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற ஊராட்சி மன்ற துணை தலைவர் எம்.உமா முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் ஆர்.பாரதி, எஸ்.கிருஷ்ணவேணி, பி.சபிதா, என்.ராஜா, டி.ரேவதி, இ.பாண்டுரங்கன், எஸ்.முனியம்மாள், டி.வினோத்குமார், ஊராட்சி செயலாளர் கே.குமார் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.