விருதுநகர்
13 சுற்றுலாத்துறை தங்கும் விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
|தமிழகம் முழுவதும் பயன்பாடு இல்லாமல் உள்ள 13 சுற்றுலாத்துறை விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கா. ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகம் முழுவதும் பயன்பாடு இல்லாமல் உள்ள 13 சுற்றுலாத்துறை விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கா. ராமச்சந்திரன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
விருதுநகர் மற்றும் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:- விருதுநகர் மற்றும் சாத்தூரில் செயல்படாமல் இருக்கும் சுற்றுலா துறையின் தங்கும் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சாத்தூரில் உள்ள தங்கும் விடுதியில் 6 அறைகள் உள்ளன. அதுவும் செயல்படாமல் உள்ளது.
படகு சவாரி
தமிழகம் முழுவதும் இதேபோன்று 13 தங்கும் விடுதிகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. மூடி கிடக்கும் விடுதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுலாத்துறைக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சுற்றுலா துறையின் கீழ் உள்ள கைவிடப்பட்ட 300 இடங்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய்ப்புள்ள இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா மையம்
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதியினை சுற்றுலா மையமாக்க ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவகுமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.