கள்ளக்குறிச்சி
உயிர் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை
|வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர்சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு, தணிக்கை அலுவலர்களுக்கு வெடிபொருள் தயாரிக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் சமீபகாலமாக வெடிபொருள், பட்டாசு உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே வெடிபொருளை தயாரிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் சேமித்து வைக்ககூடாது. அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் மட்டுமே வெடிபொருள் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
வெடிபொருள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் இடங்களில் செல்போனை பயன்படுத்தக்கூடாது. அனுமதி இல்லாத தடைசெய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெயரிடப்படாத, முழுமையாக பேக்கிங் செய்யாத பட்டாசுகள் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோகூடாது.
பட்டாசு கடைகளின் மேல் அலங்கார விளக்குகள், சீரியல் விளக்குகள் போடுவதை தவிர்க்க வேண்டும். போதையில் உள்ளவர்கள், மனநல பாதிப்பு அல்லது உடல் ஊன முற்றோரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும் கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை.
மின்சார மெயின் சுவிட்ச் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். கிப்ட் பாக்ஸ்களை பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ தயார் செய்யக்கூடாது. தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப் வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் மற்றும் பட்டாசு வெடிக்க கூடாது என அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும்.
பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.
பின்னர் வெடிபொருள் தயாரித்தல், சேமிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொழுது தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பணிகள் மேற்கொள்ளப்படும் குடோன்களின் அமைப்பு உள்ளிட்ட வெடிபொருள் தொடர்பான பல்வேறு விவரங்கள் குறித்து விழுப்புரம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மூலம் அகன்ற திரையில் வெடிபொருள் தயாரிக்கும் உரிமதாரர்களுக்கு விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கோட்டாட்சியர்கள் பவித்ரா, கண்ணன், துணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர்(வெடிபொருள்) தாணுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் பருவதம் மற்றும் வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.