ஆதி திராவிடர் விடுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
|ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"மைலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இங்கு தங்கியுள்ள மாணவர்கள் வேதனையுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
இத்தகைய மக்கள் விரோத ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது. எனவே, வயிற்றுப் பசி போக்க அல்லலுறும் படிக்கும் ஆதிதிராவிட மாணாக்கர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் திமுக ஆட்சியை சுட்டெரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.