< Back
மாநில செய்திகள்
பத்திரப் பதிவுத்துறையில் முறைகேடுகள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
மாநில செய்திகள்

"பத்திரப் பதிவுத்துறையில் முறைகேடுகள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

தினத்தந்தி
|
21 Aug 2022 3:40 AM IST

பத்திரப் பதிவுத்துறையில் முறைகேடுகள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெயிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

"புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது.

தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்கு பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்த போதும் நிலத்தைப் பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு உத்தரவிட்ட உயரதிகாரி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதும் அவர்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்திரப் பதிவுத்துறையில் இது போன்ற முறைகேடுகள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை சட்டமீறலை விரைந்து விசாரித்து முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப் பதிந்து சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்