பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
|பட்டாசு ஆலை வெடி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
சென்னை,
விருதுநகர் அருகே தாயில் பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முருகேஸ்வரி, பானு ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
மண்குண்டாப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் முருகேஸ்வரி மற்றும் பானு எனும் இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துவதுடன், இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.