< Back
மாநில செய்திகள்
திருவள்ளுவர் சிலை வைக்க 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலை வைக்க 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
9 Dec 2022 8:27 PM IST

திருவள்ளுவர் சிலை வைக்க 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை செயலாளர் கணசேன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த சங்கம் கடந்த 1997-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், தமிழ்மொழிக்கான பரிசு பெற்றவர்களை கவுரவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும்.

திண்டுக்கல்லில் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி திருவள்ளுவர் சிலை அமைக்க தடையில்லாச் சான்று பெறப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் சிலை வைக்க பீடம் அமைத்து எங்கள் செலவில் சிலையை பீடத்தில் நிறுவி விட்டோம். ஆனால், திடீரென திண்டுக்கல் போலீசார், எந்தவித காரணமும் இன்றி சிலையை இறக்கி தரையில் வைத்துவிட்டனர். இது தமிழினத்துக்கு ஏற்பட்ட அவமானமாகும்.

சிலை அமையப்பெற்ற இடம் தகுந்த அனுமதி பெறப்பட்டது. எந்த வித இடையூறும் ஏற்படாத நிலையில் பீடத்தில் நிறுவப்பட்ட சிலையை எந்த முகாந்திரம் இன்றி போலீசார் இறக்கி வைத்து உள்ளனர். எனவே திருவள்ளுவர் சிலையை மீண்டும் பீடத்தில் நிறுவிட அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொது இடங்களில் அனுமதியின்றி சிலைகள், நினைவு தூண்கள், வளைவுகள் வைக்கக்கூடாது. அந்த வகையில் மனுதாரர் கோரிக்கையை உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பியுள்ளார் என்றார்.

விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட இடத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்க 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்