< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை போக்க உடனே நடவடிக்கை வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை போக்க உடனே நடவடிக்கை வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
9 Jun 2023 5:30 AM IST

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை போக்க உடனே நடவடிக்கை வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

சென்னை,

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் துன்புறுத்தல், கள்ளச்சாராய கலாசாரம், போதை பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல பிரச்சினைகளால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.

தமிழ்நாட்டில் நிலவுகின்ற நிலைமையை பார்க்கும்போது, எதையும் சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது, தி.மு.க. அரசு திணறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின்குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்