< Back
மாநில செய்திகள்
உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க.வினர் மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க.வினர் மனு

தினத்தந்தி
|
7 Sept 2023 10:13 AM IST

உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம், தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வ சூடாமணி தலைமையில், கட்சியினர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மனு வழங்கினர்.

அதில், ''சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சில மூடநம்பிக்கைகளை குறிப்பிட்டும், சாதிய வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பேசினார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில அயோத்தி ராம்காட்டின் ஆச்சாரியா பீடத்தின் தபஸ்வி சாவ்னியின் மஹிந்த ஜெகத்குரு சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவி கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும், யாரும் தலை துண்டிக்காவிட்டால் நானே அவரது தலையை துண்டிப்பேன் அதற்கு வாள் தயாராக உள்ளது என்று கூறி உள்ளார். அந்த காட்சி அனைத்து சமூக வலைதளங்களிலும் வந்துள்ளது. எனவே அந்த சாமியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு வழங்கினர்.

இதேபோல் நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், துணை கமிஷனர் அனிதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்