வேலூர்
கந்து வட்டி கேட்டு தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
|கந்து வட்டி கேட்டு தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லாரி டிரைவர் மனு கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கீரைக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவர் தாயார், மனைவி, மகனுடன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.
அதில், நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை கொண்டு தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுகத்தூரை சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம் குடும்ப செலவுக்காக வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்காக இதுவரை ரூ.96 ஆயிரம் வட்டி செலுத்தி உள்ளேன். ஆனால் அவர்கள் கந்து வட்டி போட்டு இன்னும் ரூ.1,40,000 தரவேண்டும் என்று கூறி கடந்த 14-ந் தேதி என்னை சரமாரியாக தாக்கினார்கள்.
ரூ.20 ஆயிரம் கடனுக்கு கந்து வட்டி போட்டு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் செலுத்தும்படி மிரட்டுகிறார்கள். கந்து வட்டி கேட்டு என்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னையும், எனது குடும்பத்தினரையும் கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.