திருச்சி
இனிப்பு- கார வகைகளை சுகாதாரமற்ற முறையில் விற்றால் நடவடிக்கை; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
|இனிப்பு- கார வகைகளை சுகாதாரமற்ற முறையில் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை மாநில இணை ஆணையர் தேவபார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில இணை ஆணையர் தேவபார்த்தசாரதி பேசுகையில், இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள், பேக்கரி உணவு பொருட்கள் விற்பனையாளர்கள், கார பலகார வகைகள் செய்து தரும் வியாபாரிகள், அனைவரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி உரிமம் மற்றும் பதிவு சான்றுகளை உணவு பாதுகாப்புத்துறை மூலம் கட்டாயமாக பெற வேண்டும். மேலும், இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் கலப்படமில்லாத சுத்தமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
அந்த உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும் பொட்டலமிடப்படும் வகைகளில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி கட்டாயமாக குறிப்பிட வேண்டும். பலகாரங்களை மூடி வைத்து விற்க வேண்டும்.
இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகைய உணவு வணிகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், உணவு பாதுகாப்பு துறையை சார்ந்தவர்களோ அல்லது உணவு பாதுகாப்பு துறையின் பெயரை பயன்படுத்தியோ யாராவது பண்டிகை காலத்தை முன்னிட்டு தவறான நோக்கத்தில் அணுகினால் ஊழல் தடுப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.