< Back
மாநில செய்திகள்
பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
மாநில செய்திகள்

"பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை" - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
21 Oct 2022 5:12 PM IST

கட்டுமானக் கழிவுகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களைக் கட்டும் போது ஏற்படும் கட்டுமானக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இந்தியாவில் கட்டுமானக் கழிவுகளை கையாள, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்பட்டது.

இதன்படி உருவாக்கப்படும் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், சேமித்தல், ஒரு நாளில் 20 டன் அல்லது அதற்கு மேல் அல்லது ஒரு மாதத்திற்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்திற்கும், கட்டுமானம் அல்லது இடிப்பு அல்லது மறுவடிவமைப்புப் பணிகளைத் தொடங்கும் முன், கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சமர்ப்பித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த அனுமதிகளைப் பெற வேண்டும்.

கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சேகரிப்பு மையத்தில் சேமித்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க வசதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கட்டுமான மற்றும் இடிப்புக் கழிவுகளை போக்குவரத்து அல்லது பொதுமக்கள் அல்லது வடிகால்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது, காற்றினால் பரவும் கட்டுமான கழிவுகளை சணல், தார்ப்பாய் போன்றவற்றால் மூட வேண்டும். கட்டுமான கழிவுகளை கையாளும் நடவடிக்கைகளின் போது நீர் தெளித்தல் அல்லது கழிவு அகற்றலை சீரமைத்தல் மூலம் கழிவுகள் ஈரப்படுத்தப்பட வேண்டும். கழிவுகளை சேமிப்பதற்காக, அதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகளை அமைக்க வேண்டும்.

சென்னையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் தினசரி 400 டன் திறன் கொண்ட கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை செயல்படுத்துவதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

எனவே கட்டுமான கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் அடையாளம் காணப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பகுதி தவிர, சாலைகள், நதிக்கரைகள், நீர்நிலைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் கொட்டினால், அவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (திருத்தப்பட்டது) விதிகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்